தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் திருவாரூரில் 2–வது நாளாக நடந்தது


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் திருவாரூரில் 2–வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 10:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது. இறந்தவரின் உடலுடன் போராட்டம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு

திருவாரூர்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது.

இறந்தவரின் உடலுடன் போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மயங்கி விழுந்த முத்துப்பேட்டை கோவிலூரை சேர்ந்த விவசாயி மகாலிங்கம் என்பவர் உயிரிழந்தார். அவருடைய உடலுடன் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் இறந்தவரின் உடலுடன் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது. இதனிடையே உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொலைபேசி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியதை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் விவசாயி மகாலிங்கத்தின் உடல், அடக்கம் செய்வதற்காக அவருடைய சொந்த ஊரான கோவிலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

2–வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சேரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், உலகநாதன், பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பெண்கள் கும்மி பாடல்களை பாடியும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தின் காரணமாக நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் மூடப்பட்டது. அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story