சொத்துப்பிரச்சினை காரணமாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு முதியவர் தேசிய கொடியுடன் தர்ணா


சொத்துப்பிரச்சினை காரணமாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு முதியவர் தேசிய கொடியுடன் தர்ணா
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 10:47 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுப்புராயலு (வயது 65). இவர், நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த தாசில்தார் குமரவேலு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம், எனக்கு வளர்புரத்தில் எங்களது தாத்தா காலத்து நிலம் உள்ளது. அதை என

அரக்கோணம்,

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுப்புராயலு (வயது 65). இவர், நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த தாசில்தார் குமரவேலு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம், எனக்கு வளர்புரத்தில் எங்களது தாத்தா காலத்து நிலம் உள்ளது. அதை எனக்குத் தராமல், எனது உறவினர்கள் பங்குப் போட்டுக் கொண்டார்கள். அந்தச் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. எனது பெயருக்குச் சொத்தை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

தாசில்தார் குமரவேலு, அந்த முதியவரிடம், உங்கள் நிலப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி அனுப்பி விட்டார். இதைக்கேட்ட முதியவர் சுப்புராயலு தாலுகா அலுவலக வாசலில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுப்புராயலுவை, அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி தாசில்தாரிடம் அழைத்துச் சென்றார்கள்.

பின்னர் போலீசார் உங்கள் நிலப்பிரச்சினையை நீதிமன்றம் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர். மேலும் தேசிய கொடியை போராட்டத்துக்குப் பயன்படுத்தி, அதனை அவமதிக்கக்கூடாது எனக்கூறி அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.


Next Story