முதுமலையில் நோய் தாக்கியதால் வளர்ப்பு யானை இறந்தது வனத்துறையினர் தகவல்
முதுமலையில் நோய் தாக்கியதால் வளர்ப்பு யானை இறந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர். வளர்ப்பு யானைகள் முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாமில் 16 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், மக்னா எனப்படும் தந்தம் இல்லாத 2 ஆண் யானைக
மசினகுடி
முதுமலையில் நோய் தாக்கியதால் வளர்ப்பு யானை இறந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வளர்ப்பு யானைகள் முகாம்நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாமில் 16 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், மக்னா எனப்படும் தந்தம் இல்லாத 2 ஆண் யானைகள் உள்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த 2013–ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த 6 காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் முகாமிற்கு 3 யானைகளும், முதுமலைக்கு 3 யானைகளும் கொண்டு வரபட்டன.
முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெண் யானை உள்பட 3 யானைகள் 6 மாத கால கும்கி பயிற்சிக்கு பின்னர் மற்ற வளர்ப்பு யானைகளை போல வளர்க்கப்பட்டு வந்தன. இதில் நர்மதா என்ற 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 1–ந்தேதி இறந்தது.
மேலும் ஒரு யானை சாவுமுதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர் நர்மதா யானை இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் நர்மதா யானையுடன் திருவண்ணாமலையிலிருந்து பிடித்து வரப்பட்டு பாரதி என்ற 9 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு நேற்று முன்தினம் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தது. அடுத்தடுத்து 2 யானைகள் இறந்ததால் முதுமலையை சேர்ந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேத பரிசோதனைஇதைத்தொடர்ந்து இறந்த பாரதி யானையின் உடல் நேற்று தெப்பகாட்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நாமக்கல்லில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், நீலகிரி மாவட்ட நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் சுகுமாறன், முதுமலை கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், உமா, அனில்குமார், ராஜேசுவரன், மோகன்வேல் ஆகியோர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது.
நீர்ச்சத்து குறைபாடுஇதுகுறித்து கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:–
இறந்த யானையின் குடல் பகுதியில் புண்கள் இருந்தன. இதன் காரணமாக யானை கடந்த சில நாட்களாக உணவு சாப்பிடாமல் இறந்துள்ளது. இதனால் யானைக்கு நீர்ச்சத்து குறைந்து உள்ளது. மேலும், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்தது முற்கட்டமாக தெரியவந்துள்ளது. இருப்பினும் யானையின் உடற்கூறுகள் சேகரிக்கப்பட்டு ரசாயன கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறிக்கை வந்த பின்னர் யானையின் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் முதுமலை முகாமில் கடந்த 2004–ம் ஆண்டு சுவாமிநாதன் என்ற 12 வயது ஆண் யானையும், சத்யன் என்ற 9 வயது ஆண் யானையும், ராஜேஸ்வரி என்ற 13 வயது பெண் யானையும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறந்தது குறிப்பிடத்தக்கது.