வால்பாறையில் தொடரும் அட்டகாசம் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கடித்துக்கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் வால்பாறை நகரில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து
வால்பாறை
வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கடித்துக்கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தைப்புலி நடமாட்டம்வால்பாறை நகரில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. வால்பாறை நகர் பகுதியை ஒட்டிய வாழைத்தோட்டம், எம்.ஜி.ஆர்.நகர், கூட்டுறவு காலனி, அண்ணா நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, காமராஜ் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளிலும், குறிப்பாக வால்பாறை–பொள்ளாச்சி சாலையிலும் சிறுத்தைப்புலிகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 29–ந் தேதி யூனியன் வங்கிக்கு முன்னால் படுத்திருந்த பூனையை சிறுத்தைப்புலி ஒன்று கவ்விச்சென்றது.
கடந்த 5–ந் தேதி கக்கன்காலனி பகுதியில் கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்று குடியிருப்பு பகுதியில் உடலை போட்டுவிட்டு சென்றது. இதன்பின்னர் மீண்டும் யூனியன் வங்கிக்கு முன்னால் கடந்த 14–ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு நின்று கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை கடித்துக்கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள் 2 சிறுத்தைப்புலிகளை கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் ஓடினர்.
ஆட்டை கடித்துக்கொன்றதுஇந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. இந்த சிறுத்தைப்புலி லட்சுமி என்பவரின் ஆட்டை கடித்துக்கொன்று சாப்பிட்டுவிட்டு மீதி உடலை குடியிருப்பு பகுதியில் போட்டுவிட்டு சென்றது. நேற்றுமுன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை காணவில்லை என்று லட்சுமி நேற்றுமுன்தினம் இரவு வரை அந்த பகுதி முழுவதும் தேடினார். இந்தநிலையில் நேற்று காலையில் காமராஜ் நகர் பகுதி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு அருகே ஆட்டின் உடலை கொன்று சிறுத்தைப்புலி போட்டுவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் சக்திவேல் உத்தரவின் பேரில், வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன ஆட்டின் உடலை பார்வையிட்டனர். மேலும் அதே இடத்துக்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு அங்கேயே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைஇந்த சம்பவம் குறித்து காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:– கடந்த ஒரு மாதமாகவே எங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தைப்புலி ஆடு, மாடுகளை கடித்துக்கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சில நேரங்களில் பகலிலேயே சிறுத்தைப்புலி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தேயிலை தோட்டம் அருகே சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கிடந்தது. இதனால் பகல் நேரங்களில் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது. இந்தநிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியவில்லை.
சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் இதுநாள் வரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதர் செடிகளை அகற்ற வேண்டும்இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் கிராம மக்கள் நாய், பூனை, ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே வளர்த்தாலும் ஆடு, மாடுகளை கொட்டகை அமைத்து வளர்க்க வேண்டும். இரவு நேரங்களில் கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய கூடாது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளை ஒட்டி வளர்ந்துள்ள புதர் செடிகளை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும். குறிப்பாக காமராஜ் நகர் பகுதியில் இருந்து சிறுவர் பூங்கா பகுதி வரை உள்ள சவரங்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதிக்கும், குடியிருப்பு பகுதிக்கும் இடைப்பட்ட ஆற்றின் ஓரப்பகுதி முழுவதிலும் உள்ள புதர் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.