9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். சாலைப்பணியாளர்கள் கோவை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் பணிபுரியும் சாலைப்பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியலை தமிழ்நாடு சார் நிலை பணியமைப்பு

கோவை,

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

சாலைப்பணியாளர்கள்

கோவை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் பணிபுரியும் சாலைப்பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியலை தமிழ்நாடு சார் நிலை பணியமைப்பு விதியின் கீழ் வெளியிட வேண்டும், மாத ஊதிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஊதிய ரசீது வழங்க வேண்டும் சாலைப்பணியாளர்க ளுக்கு விடுப்புகால சுற்றுலா பயண செலவை வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கோவை–திருச்சி ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு கோட்ட தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோரிக்கை ஏற்கப்பட வில்லை

கோவை கோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் 120 சாலைப்பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிய வேலைகள் வழங்கப்படுவது இல்லை. ஒப்பந்ததாரர் செய்யக்கூடிய வேலைகளை சாலைப்பணியாளர்கள் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். அத்துடன் அதிகாரிகள் ஒரு சிலரை தங்களின் சொந்த வேலைக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

சாலைப்பணியாளர்களுக்கு வழங்கும் ஷூக்கள் தரமற்றதாக இருக்கிறது. அந்த ஷூக்களை போட்டு வேலை செய்ய முடிய வில்லை. அது போன்று 8 கி.மீ. தூரத்துக்கு 2 பேர் என்ற அடிப்படையில் சாலைப்பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று நாங்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

குடும்பத்துடன் போராட்டம்

மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாலைப்பணியாளர் பணிக்கு செல்லும் போது போக்குவரத்துப்படி வழங்க வேண்டும். ஆனால் அதுவும் வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் கோட்ட அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

எனவே தான் நாங்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப் படும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும். அப்படியும் ஏற்கப்பட வில்லை என்றால் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் மாநில தலைவர் அம்சராஜ், பொருளாளர் ரா.தமிழ், மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் ஏசையன் நன்றி கூறினார்.


Next Story