ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி ஆணையர் அறிவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று வருங்கால வைப்புநிதி ஆணையர் அறிவித்துள்ளார். சிறப்பு முகாம் கோவையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நி
கோவை
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று வருங்கால வைப்புநிதி ஆணையர் அறிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கோவையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வருகிற ஜனவரி மாதம் 15–ந் தேதிக்குள் ஆதார் எண் மற்றும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட் டது. இதற்காக கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தினமும் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் வாழ்வு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். நேற்றும் 700–க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களின் வாழ்வு சான்றிதழை பதிவு செய்தனர்.
இதற்கிடையே கோவை வருங்கால வைப்புநிதி ஆணையர் ஓ.கே.அனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஓய்வூதியம் வழங்கப்படாதுவருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெற்ற அனைவரும் வருகிற ஜனவரி 15–ந் தேதிக்குள் தங்களின் ஆதார் எண் மற்றும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஜனவரி மாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் வழங்கப்படாது. பின்னர் அவர்கள் எப்போது தங்களின் சான்றிதழை சமர்ப்பிக்கிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
மண்டல அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஏதேனும் மின்னணு சேவை மையம், பொது இ–சேவை மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். அதுபோன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள எல்.எம்.டபிள்யூ ரோடு ஜி.கே.டி. மண்டபம், கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம், பொள்ளாச்சியில் உள்ள வருங்கால வைப்புநிதி நிறுவன மாவட்ட அலுவலகம், குன்னூர், ஊட்டியில் உள்ள வருங்கால வைப்புநிதி மாவட்ட அலுவலகம் ஆகியவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை அந்தந்த பகுதியில் உள்ள ஓய்வூதியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.