கோவை அருகே வேனில் கிடந்த கைத்துப்பாக்கி ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு சொந்தமானது போலீஸ் விசாரணையில் தகவல்


கோவை அருகே வேனில் கிடந்த கைத்துப்பாக்கி ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு சொந்தமானது போலீஸ் விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:30 AM IST (Updated: 28 Dec 2016 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே வேனில் கிடந்த கைத்துப்பாக்கி ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு சொந்தமானது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கூரியர் நிறுவன வேன் கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் கடந்த 23–ந் தேதி இரவு 8 மணியளவில் ஒரு கூரியர் நிறுவனத்துக்கு சொந

சூலூர்,

கோவை அருகே வேனில் கிடந்த கைத்துப்பாக்கி ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு சொந்தமானது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கூரியர் நிறுவன வேன்

கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் கடந்த 23–ந் தேதி இரவு 8 மணியளவில் ஒரு கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை கோவையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 23) என்பவர் ஓட்டிச்சென்றார். பட்டணம் புதூர் பிரிவு அருகே வந்தபோது கையில் வாக்கி டாக்கியுடனும், டிப் டாப் உடையணிந்தும் நின்ற ஒரு நபர், அந்த வேனை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் டிரைவர் கார்த்திகேயனிடம் அந்த நபர், தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், ஒரு குற்றவாளியை பிடிப்பதற்காக இங்கே நின்று கொண்டு இருப்பதாகவும், உனது வேனில் ஏறிக்கொள்கிறேன், ஈச்சனாரி பிரிவு சென்றதும் என்னை இறக்கிவிடு என்று லிப்ட் கேட்டு அந்த வேனில் ஏறினார். ஏறியவுடன் அந்த நபர் தான் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை வேனில் முன்புறம் உள்ள `டேஸ் போர்டில்` வைத்தார்.

பட்டணம் பிரிவில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் சென்றதும், எங்களது குழுவில் உள்ள போலீசார் காரில் வெள்ளலூர் ரோட்டில் வந்துவிட்டதாகவும், தன்னை வெள்ளலூர் ரோட்டில் இறக்கிவிடு என்று கூறி உள்ளார். அதன்படி கார்த்திகேயன், அந்த நபரை வெள்ளலூர் ரோட்டில் இறக்கிவிட்டு தனது கூரியர் நிறுவனத்தில் வேனை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

வேனில் கிடந்த கைத்துப்பாக்கி

பின்னர் மறுநாள் காலையில் கார்த்திகேயன் தனது வேனை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது வேனில் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் துப்பாக்கியை எடுத்து சென்று சூலூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த துப்பாக்கியை வாங்கி பார்த்தபோது, 7.65 எம்.எம்.ரக கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது.

காவல்துறையில் 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால், இது போலீசுக்கு சொந்தமானது இல்லை என உறுதி செய்யப்பட்டது. உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இந்த வகையான கைத்துப்பாக்கியை பயன்படுத்துவார்கள் என்பதால், துப்பாக்கியின் புகைப்படம், அதில் இருந்த எண் ஆகியவற்றை சென்னையில் உள்ள குற்ற ஆவண காப்பக அலுவலகத்திற்கு அனுப்பி, விசாரணை நடத்தினர்.

மத்திய ரிசர்வ் படை வீரர்

விசாரணையில் அந்த கைத்துப்பாக்கி சென்னை ஆவடியை சேர்ந்த மதியழகன் (வயது 46) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், இவர் சத்தீஷ்கரில் உள்ள மத்திய ரிசர்வ் படையில் வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்தபோது கைத்துப்பாக்கிக்கு அனுமதி பெற்றதும், ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது, துப்பாக்கி அவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மதியழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கைத்துப்பாக்கி தொலைந்து விட்டதாகவும், இது தொடர்பாக அவர் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அவர் பயன்படுத்திய துப்பாக்கி எப்படி இங்கு வந்தது? என்பது மர்மமாக உள்ளது.

எனவே அவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை திருடியவர்கள் யார்? அவர்கள் எதற்காக இங்கு கொண்டு வந்தார்கள்? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் மதியழகனை கோவைக்கு வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story