இலவச பஸ் பாஸ் செல்லுபடியாகும் தூரத்தை நீட்டிக்கக்கோரி காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்
இலவச பஸ்பாஸ் செல்லுபடியாகும் தூரத்தை நீட்டிக்கக்கோரி காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே முள்ளிப்புரத்தில
முத்தூர்,
இலவச பஸ்பாஸ் செல்லுபடியாகும் தூரத்தை நீட்டிக்கக்கோரி காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு கலைக்கல்லூரிதிருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே முள்ளிப்புரத்தில் காங்கேயம் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்லடம், பொங்கலூர், அவினாசி, காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக்காடையூர் மற்றும் ஈரோடு மாவட்டம் பூந்துறை, சென்னிமலை, திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த மாணவ–மாணவிகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் பாஸை வைத்து மாணவ–மாணவிகள் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய முடியும்.
ஆனால் பல்லடம், பழனி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து காங்கேயம் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ள தூரம் 30 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. எனவே மேற்கண்ட ஊர்களில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவ–மாணவிகள் பஸ்சில் 30 கிலோ மீட்டரை கடந்தவுடன், மீதமுள்ள தூரத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது.
சாலை மறியல்எனவே இலவச பஸ் பாஸ் செல்லுபடியாகும் தூரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும், கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும், கல்லூரி நேரத்திற்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 9 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திடீரென்று மாணவ–மாணவிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பழனியில் இருந்து ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஈரோட்டில் இருந்து காங்கேயம், தாராபுரம், பழனி சென்ற அரசு பஸ்கள் மற்றும் லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.
பேச்சுவார்த்தைஇது பற்றி தகவல் அறிந்த காங்கேயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் மாணவ–மாணவிகள் தரப்பில் போக்குவரத்து கழகத்தில் இருந்து அதிகாரிகள் நேரில் வந்து இலவச பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.
சமரசம்இதுபற்றி காங்கேயம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து உதவி பொறியாளர் பார்த்தீபன், போக்குவரத்து கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கல்லூரி முதல்வர் மணிமேகலை, காங்கேயம் தாசில்தார் வெங்கடலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வந்து மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மாணவ–மாணவிகள் காலை நேரத்தில் கல்லூரிக்கு வருவதற்கு காங்கேயத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றும், நீண்ட தூரம் பயணம் செய்யும் மாணவ–மாணவிகளின் இலவச பஸ் பாஸ் தூரத்தை நீட்டிப்பு செய்திட அரசுக்கு பரிந்துரை செய்து உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மாணவ–மாணவிகள் கைவிட்டு வகுப்புக்கு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காங்கேயம்–ஈரோடு மெயின்ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற போது கல்லூரியில் பயிலும் மாணவ–மாணவிகள் அசம்பாவித சம்பவங்கள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
தனியார் பஸ்கள் செல்ல அனுமதித்த மாணவர்கள்
சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற போது சுமார் அரைமணி நேரம் அனைத்து வாகனங்களும் ரோட்டின் இருபுறமும் நின்றன. அதன் பின்பு போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தையை தொடங்கியதும் மற்ற கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் பஸ்கள் தொடர்ந்து ரோட்டில் செல்வதற்கு மாணவ–மாணவிகள் அனுமதி அளித்தனர். ஆனால் இலவச பஸ் பாஸ் பிரச்சினை காரணமாக சுமார் 2 மணி நேரம் டவுன் பஸ் தவிர அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் செல்வதற்கு மாணவ–மாணவிகள் அனுமதிக்கவில்லை.