கல்வி கடனுக்காக பென்சன் பணத்தை பிடித்ததை கண்டித்து வங்கி முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் போராட்டம்


கல்வி கடனுக்காக பென்சன் பணத்தை பிடித்ததை கண்டித்து வங்கி முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:45 AM IST (Updated: 28 Dec 2016 1:21 AM IST)
t-max-icont-min-icon

கல்விக்கடனுக்காக பென்சன் பணத்தை பிடித்தம் செய்ததை கண்டித்து உடுமலையில் வங்கி முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் போராட்டத்தில் ஈடுபட்டார். வங்கி முன்பு போராட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் விஜயநகரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 72). இவருக்கு ராஜசேகர்(31)

மடத்துக்குளம்,

கல்விக்கடனுக்காக பென்சன் பணத்தை பிடித்தம் செய்ததை கண்டித்து உடுமலையில் வங்கி முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வங்கி முன்பு போராட்டம்

உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் விஜயநகரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 72). இவருக்கு ராஜசேகர்(31) என்ற மகன் உள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ்காரரான ரங்கநாதன் நேற்று காலை 10 மணி அளவில் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பாக வந்தார். அவர் கையில் வங்கியை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து ரங்கநாதன் கூறியதாவது:–

கல்விக்கடன்

காவல் துறையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். கடந்த 2004–ம் ஆண்டு குண்டடம் போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். கடந்த 2005–ம் ஆண்டு என் மகன் ராஜசேகரின் என்ஜினீயரிங் படிப்புக்காக ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தேன்.

வங்கியின் மூலம் கடன் தொகையை என்மகன் படித்த கல்லூரிக்கு அனுப்பியதாக தெரிகிறது. மேலும் என்னுடைய பென்சன் தொகையில் இருந்து வங்கி நிர்வாகம் மாதம் ரூ.1,000 வீதம் பிடித்தம் செய்து வந்தது. இவ்வாறு 4 ஆண்டுகள் வரை தொகையை பிடித்தம் செய்த வங்கியினர் பின்னர் என்ன காரணத்தினாலோ பிடித்தம் செய்யவில்லை.

மேலும் எதிர்பாராதவிதமாக கல்லூரியில் படிக்கும் போதே என் மகனுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக கால் எலும்பு பாதிக்கப்பட்டது. இதனால் அவனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலும், மனைவிக்கு சர்க்கரை நோய் இருந்ததாலும் மருத்துவ செலவுக்கு பெருமளவு பணம் தேவைப்பட்டது.

பென்சன் தொகை பிடித்தம்

இந்த நிலையில் இந்த மாதம் எனது பென்சன் தொகை முழுவதும் வங்கியினரால் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் என் மகன் வங்கிக்கணக்கில் வைத்திய செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் பிடித்தம் செய்திருக்கிறார்கள். இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு வழங்கிய கல்விக்கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டி எவ்வளவு? இதுவரை நாங்கள் கட்டிய தொகை எவ்வளவு? என்பது குறித்த எந்த விபரங்களையும் வழங்க வங்கி அதிகாரிகள் மறுக்கிறார்கள்.

இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.


Next Story