அந்தியூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியை தாக்கி 6 பவுன் நகை–ரூ.7 லட்சம் கொள்ளை


அந்தியூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியை தாக்கி 6 பவுன் நகை–ரூ.7 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 28 Dec 2016 3:30 AM IST (Updated: 28 Dec 2016 1:33 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியை தாக்கி ஹெல்மெட் அணிந்து காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 6 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– வியாபாரி

அந்தியூர்,

அந்தியூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியை தாக்கி ஹெல்மெட் அணிந்து காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 6 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வியாபாரி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் மணி என்கிற முனுசாமி (வயது 45). இவர் பேக்கரி கடைகளுக்கு தேவையான ரொட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள புடவைக்காரி அம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். எனவே கோவில் வரவு செலவு கணக்குகளையும் இவர் கவனித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பல்வேறு பேக்கரி கடைகளுக்கும் சென்று பணத்தை வசூல் செய்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் கடையை ஒட்டியுள்ள வீட்டில் இவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இவருடைய குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

தாக்கினர்

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் முனுசாமி வீட்டுக்கு 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் காரில் வந்தது. இவர்களில் ஒருவர் லுங்கியும், மீதம் உள்ள 4 பேர் பேண்ட், சட்டையும் அணிந்திருந்தனர். மேலும் 5 பேரும் முகம் தெரியக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிந்திருந்தனர். உடனே அவர்கள் முனுசாமி தூங்கி கொண்டிருந்த வீட்டின் கதவை தட்டினர். கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த முனுசாமி விழித்தெழுந்தார்.

கதவை திறந்ததும் 5 பேரும் திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்தனர். அதில் 2 பேர் சட்டென்று முனுசாமியை தாக்கியதுடன், அவருடைய கழுத்தின் குரல்வளையில் கையை வைத்து அழுத்தி அவரை சுவரோடு சுவராக தூக்கி நிறுத்தினர். இதனால் முனுசாமியால் சத்தம் போட முடியவில்லை. இதில் 3 பேர் கையில் இரும்பு கம்பியுடன் வீட்டின் உள்ளே சென்றனர்.

நகை–பணம் கொள்ளை

அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் தங்க நாணயம், ½ பவுன் மோதிரம் ஆகியவற்றை எடுத்தனர். பின்னர் பீரோவில் தனியாக வைக்கப்பட்டிருந்த புடவைக்காரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை பணமான ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த வியாபார வசூல் பணம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் முனுசாமியின் அருகில் வந்தனர்.

‘நாங்கள் வெளியே போகிறோம். ஏதாவது சத்தம் போட்டு எங்களை காட்டிக்கொடுக்க நினைத்தாய் என்றால் உன்னை கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர். பிறகு கொள்ளையர்கள் 5 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

காரில் தப்பினர்

வெளியேறும்போது வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டனர். வீட்டின் முன்பு ஏற்கனவே தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி தப்பினர். கொள்ளையர்கள் சென்றுவிட்டதை அறிந்த முனுசாமி வீட்டின் கதவை உள்ளே இருந்து தட்டியபடி ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். முனுசாமியின் சத்தம் கேட்டதும் மற்றொரு வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அவருடைய குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். உடனே அவர்கள் முனுசாமி தூங்கி கொண்டிருந்த வீட்டுக்கு ஓடோடி வந்தனர்.

அங்கு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து முனுசாமியை மீட்டனர். அதன் பின்னர்தான் அவருடைய குடும்பத்தினருக்கு முனுசாமியை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பீரோ மற்றும் கதவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியை தாக்கி ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருடியபோது கொள்ளையனுக்கு வந்த செல்போன் அழைப்பு

முனுசாமியின் வீட்டில் திருடிக்கொண்டிருந்தபோது கொள்ளையர்களில் ஒருவனுக்கு செல்போன் அழைப்பு வந்து உள்ளது. அப்போது கொள்ளையனிடம் செல்போனில் பேசியவர் ‘வீட்டில் எத்தனை பேர் உள்ளனர்,’ என்று கேட்டுள்ளார். உடனே கொள்ளையன், ‘ஒருவர் தான் உள்ளார்,’ என்றான். உங்களிடம் ஏதாவது பிரச்சினை செய்தால் ‘அவனை கொன்றுவிடுங்கள்’ என செல்போனில் பேசியுள்ளான். செல்போனில் பேசிய இந்த பேச்சு முனுசாமியின் காதிலும் விழுந்தது. இதனால் பதறிப்போன அவர் கொள்ளையர்களிடம் எந்த பிரச்சினையும் செய்யவில்லை. இதனால் அவர் உயிர் தப்பினார்.

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வியாபாரியின் முகத்தில் தூக்கி எறிந்த கொள்ளையர்கள்

முனுசாமியின் பீரோவை உடைத்து திருடியபோது அதில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ரூ.25 ஆயிரம் இருந்தது. இதையும் கொள்ளையர்கள் திருடி உள்ளனர். அப்போது இது செல்லாது நோட்டுகள் என தெரிந்ததும் கோபத்தில் அந்த நோட்டுகளை தங்களுடன் எடுத்து செல்லாமல் முனுசாமியின் முகத்தில் தூக்கி வீசினர்.


Next Story