திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு வாடிக்கையாளர்கள்– அதிகாரிகள் வாக்குவாதம்
500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய்
திண்டுக்கல்,
500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படமாட்டாது என பல நிறுவனங்களில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டு உள்ளது. ஆனால், 10 ரூபாய் நாணயம் செல்லாது என இதுவரை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நேற்று வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்காக குவிந்தனர். அதில் பலரும் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருந்தனர். ஆனால், அந்த நாணயத்தை வாங்க அதிகாரிகள் மறுத்தனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த உயர் அதிகாரிகள், 10 ரூபாய் நாணயத்தை வாங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்பிறகு, பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதே போல சில வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படவில்லை. சில வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் 10 ரூபாய் நாணயங்கள் பெறப்பட்டன.