டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு வணிகர்கள்–பொதுமக்கள் மாற வேண்டும் திண்டுக்கல்லில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு வணிகர்கள்–பொதுமக்கள் மாற வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் பணப்பர
திண்டுக்கல்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு வணிகர்கள்–பொதுமக்கள் மாற வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைதிண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பற்றிய செயல்முறை கருத்தரங்கு, திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மேடா பாலன் முன்னிலை வகித்தார். மேலும் சங்க நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளையின் டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் முத்து கலந்து கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பாக செயல்முறை விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டன. அந்த வகையில் பணப்பரிவர்த்தனையும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து வங்கி இல்லாத பணப்பரிவர்த்தனை நடைபெறும். உலக அளவில் சுவீடன் நாட்டில் 100 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகோடரா கிராமத்தில் 90 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடக்கிறது.
பேடிஎம் எனும் செயலியில் வணிகர்கள் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து இணையலாம். அதில் இருந்து கிடைக்கும் குறியீட்டை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, அதை ஸ்கேன் செய்ய வைத்து பணத்தை வசூலிக்கலாம். ஊழியர்கள் வசூலுக்கு செல்லும் போதும் குறியீட்டை அச்சுபிரதி எடுத்து கொடுத்து அனுப்பினால் போதும், அதை ஸ்கேன் செய்ய வைத்து வணிகரின் கணக்கிலேயே பணத்தை பெற்று விடலாம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. அதேநேரம் பேடிஎம் கணக்கில் இருந்து வங்கி கணக்குக்கு பணத்தை மாற்ற ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் பேமேலும் யுபிஐ எனும் செயலி மூலம் பணப்பரிவர்த்தனை மிகவும் எளிமையானது. ஜனவரி மாதம் முதல் அனைத்து வகை வங்கி கணக்குகளுக்கும் இந்த செயலி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும், அதை யுபிஐ மூலம் இணைத்து கொள்ளலாம். இதற்கெல்லாம் மேல் ஆதார் பே எனும் செயலி ஒருசில மாதங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆதார்பே எனும் செயலியில் ஆதார் எண், கைரேகை மூலம் வாடிக்கையாளர் பணம் செலுத்தலாம். இது மிக, மிக எளிதாக இருக்கும். இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வணிகர்கள், பொதுமக்கள் மாற வேண்டும். இதற்காக தனியாக ஒரு நவீன செல்போன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ரகசிய எண்களையும் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. இது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.