தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 3:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். காலையில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. காத்திருப்பு போராட்டம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்

திருச்சி

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். காலையில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும், ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கத்தினர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள வாசல் அருகில் தரையில் அமர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்கத்தின் மாநில இணை செயலாளர் இந்திரஜித் தலைமையில் மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சுரேஷ், புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன், விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன், சிவா, மற்றும் பெண்கள் உள்பட சுமார் 60–க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.

மண் சட்டி– சமையல்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாய சங்க தலைவர்களை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம் அழைத்து பேசவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும், முதல்–அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இரண்டு விவசாயிகள் கையில் மண் சட்டி ஏந்தி நின்றார்கள். உடலில் பட்டை நாமமும் வரைந்து இருந்தார்கள். மதியம் அவர்கள் அந்த இடத்தில் இருந்தே அடுப்பில் தீ மூட்டி கஞ்சி காய்ச்சி, அங்கு இருந்தவர்களுக்கு வழங்கினார்கள்.

மாலை 5 மணிக்கு மேல் இங்கு அமர்ந்து போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் அவர்களை எழுந்து போகும்படி கூறினார்கள். ஆனால் விவசாய சங்க தலைவர்கள் இது போராட்டம் அல்ல. எங்கள் கோரிக்கைகளுக்காக காத்திருக்க தான் செய்கிறோம். சென்னையில் முதல்–அமைச்சரை எங்கள் சங்க நிர்வாகிகள் சந்திக்க நேரம் கிடைக்கும் வரை நாங்கள் இதே இடத்தில் தான் இருப்போம். முடிந்தால் எங்களை கைது செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இதனால் போலீசார் அவர்களிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

இரவிலும் தொடர்ந்தது

இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பிறகும், விவசாய சங்கத்தினரின் போராட்டம் தொடர்ந்தது. கொட்டும் பனி, உடலை நடுங்க வைக்கும் குளிர், மற்றும் கொசுக்கடி இவற்றை தாங்கி கொண்டு விவசாயிகள் மண் தரையில் அமர்ந்து இருந்தனர். அதன் பின்னர் முதல்– அமைச்சரை சந்திக்க வருகிற வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story