தீக்காயத்துடன் பெண் மர்மச்சாவு: மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் கைது தந்தை தீவைத்து கொளுத்தியதாக மகள் அளித்த புகாரில் சிக்கினார்


தீக்காயத்துடன் பெண் மர்மச்சாவு: மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் கைது தந்தை தீவைத்து கொளுத்தியதாக மகள் அளித்த புகாரில் சிக்கினார்
x
தினத்தந்தி 28 Dec 2016 5:15 AM IST (Updated: 28 Dec 2016 3:55 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தீக்காயத்துடன் இறந்த பெண்ணை அவரது கணவரே எரித்துக்கொலை செய்ததாக, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். குடும்பத்தகராறில் தந்தை தான் தாயை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொன்றதாக மகள் கொடுத்த புகாரில் அவர் போலீசில் சிக்கினார். தீக்காயத்துடன் பெண் சாவு க

பூந்தமல்லி,

வீட்டில் தீக்காயத்துடன் இறந்த பெண்ணை அவரது கணவரே எரித்துக்கொலை செய்ததாக, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். குடும்பத்தகராறில் தந்தை தான் தாயை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொன்றதாக மகள் கொடுத்த புகாரில் அவர் போலீசில் சிக்கினார்.

தீக்காயத்துடன் பெண் சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள கொழுமனிவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது 35), இவரது மனைவி வரலட்சுமி (30). இவர்களுக்கு புவனேஸ்வரி (9) என்ற மகளும், ஜீவானந்தம் (7) என்ற மகனும் உள்ளனர்.

சபரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வரலட்சுமி கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த சபரி மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோபித்துக்கொண்டு வரலட்சுமி மற்றொரு அறைக்கு சென்று தூங்கினார்.

நள்ளிரவில் அவர் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வரலட்சுமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வந்தனர்.

தந்தையை சிக்க வைத்த மகள்

மர்மமான முறையில் தீக்காயத்துடன் வரலட்சுமி இறந்தது தொடர்பாக அவரது கணவர் சபரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சபரி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சபரியின் மகளிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தைதான் தாயை தீ வைத்து கொளுத்தியதாக கூறினார். இதன் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மனைவியை தீ வைத்து கொளுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார்

போலீசாரிடம் சபரி அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

சபரி வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தின்போது வழக்கம் போல் சபரி குடித்து விட்டு வந்தது தொடர்பாக அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபித்துக்கொண்ட வரலட்சுமி அருகில் உள்ள அறையில் சென்று தூங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த சபரி வீட்டில் விளக்கில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வரலட்சுமியில் உடல் மற்றும் சேலையில் ஊற்றி விட்டு பீடியை பற்ற வைத்து அவர் மீது போட்டுள்ளார். அந்த பீடியில் இருந்த நெருப்பு மெல்ல புகைந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து வரலட்சுமி எழுந்து அலறி உள்ளார். அதன் பிறகு தீயை அணைத்து தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணவர் கைது

இது தொடர்பாக போலீசார் சபரியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணவனே மனைவியை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story