குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டித்து மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டித்து  மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 6:28 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குடிநீர் குழாய்கள் மானாமதுரை நகருக்கு ராஜகம்பீரத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானாமதுரை நகர

மானாமதுரை,

மானாமதுரையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குடிநீர் குழாய்கள்

மானாமதுரை நகருக்கு ராஜகம்பீரத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானாமதுரை நகரின் கீழ்கரை, மேல்கரை என 2 பகுதிகளிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு நீரேற்றம் செய்து, தினந்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பேரூராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பழுதாகி உள்ளன. பல இடங்களில் சாக்கடை கால்வாய் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், சாக்கடை நீர் குடிநீர் குழாயினுள் கலக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை மாற்றப்படவில்லை. இதனால் இந்த குழாய்கள் அனைத்தும் துருப்பிடித்து சேதமடைந்துவிட்டன. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறி வந்தனர்.

அலட்சியம்

இதனையடுத்து பேரூராட்சி பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரும் குழாய்களை பழுது பார்த்தாக கூறி பணம் எடுத்துகொண்டனர். ஆனால் குழாய்கள் பழுது பார்க்கப்படாததால் ஆங்காங்கே சாக்கடை நீர், குடிநீர் குழாய்களில் கலந்து விடுகிறது. தண்ணீர் திறக்கப்படும் போது குழாய்களில் சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் சுகாதாரமற்ற இந்த குடிநீரால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் புகார் செய்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களை அலட்சியப்படுத்தினர்.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை குழாயில் கருப்பு நிறத்துடன் வந்த தண்ணீரை பிளாஸ்டிக் கேன்கள், குடங்களில் பிடித்து கொண்டு வந்து பேரூராட்சி அலுவலக வாசல் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் பேரூராட்சி அதிகாரிகள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் சிவகுமாரி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்காத பொதுமக்கள் செயல் அலுவலரை கண்டித்து கோஷமிட்டனர். தாசில்தார் சிவகுமாரி பொதுமக்களை சமாதானம் செய்து உடனே சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னரே அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story