நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 699 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 699 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Dec 2016 3:00 AM IST (Updated: 28 Dec 2016 8:00 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 699 மாணவ–மாணவிகளுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பட்டம் வழங்கினார். பட்டமளிப்பு விழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 24–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையர

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 699 மாணவ–மாணவிகளுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பட்டம் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 24–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தலைமை தாங்கி 699 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் 86 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 613 பேருக்கு பி.எச்.டி. பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் கவர்னர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழக பேராசிரியர் விக்ரம் குமார் ஆகியோர் பேசினார்கள். பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் வரவேற்று பேசினார்.

பேராசிரியர் விக்ரம் குமார்

விழாவில் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் விக்ரம் குமார் பேசியதாவது:–

பட்டமும், பதக்கங்களும் பெற்றிருக்கும் மாணவ, மாணவிகளை பாராட்டுகிறேன். உலகம் உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நமது நாடு ஒரு திருப்புமுனை காலகட்டத்தில் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற்றிருப்பது அதிர்ஷ்டம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் உலகம் வேகமாக வளர்ந்து உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

1960–ம் ஆண்டுவாக்கில் பொருளாதாரம் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 சதவீதத்துக்கு மேல் மட்டுமே அடைந்தது. தனிநபர் வருமானம் ஒரு சதவீதம் மட்டுமே. 20, 30 ஆண்டுகளாக இதே நிலை நீடித்தது. நாங்கள் ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கு பல ஆண்டுகள் காத்திருந்தோம். ஒரு டெலிபோன் இணைப்பு பெறுவதற்கு 10 ஆண்டுகள் வரை காத்திருந்தோம். நாடு முழுவதும் ஒருசில என்ஜினீயரிங் கல்லூரிகளும், ஒருசில வேலை வாய்ப்புகளும் மட்டுமே இருந்தன.

ஆனால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இன்று பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்து உள்ளன. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்திய பொருளாதாரம் உலகத்துக்கு திறந்து விடப்பட்டது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக உள்ளது. தனிநபர் வருமானம் 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும் வரவேற்பு

தனிநபர் வருமானம் உயர 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று நுகர்வு சக்தி அதிகரித்து விட்டது. ஒவ்வொருவரும் போன், கார், சமையல் கியாஸ் இணைப்பு வைத்துள்ளார்கள். உணவு நிறைந்து இருக்கிறது. அனைத்து நகரங்களும் நான்கு வழிச்சாலையால் இணைக்கப்பட்டு உள்ளன, நமது பயணம் மாறிவிட்டது. அதே போல் கல்வி கற்பதும் மாறி விட்டது. தொழில்நுட்பம் பொருளாதாரத்தை மாற்றி வருகிறது.

ஒட்டுமொத்தமாக நாம் அறிவார்ந்த காலகட்டத்தில் இருக்கிறோம். இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் அனைத்து விதமான கல்வியையும் கொடுக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. கல்வியை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களில் ஏராளமான பெரிய பதவிகள் உள்ளன. இளம் பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகரன், தொலைநெறி தொடர் கல்வி இயக்குனர் கண்ணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

கவர்னருக்கு வரவேற்பு

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்(ஹெலிபேடு) இறங்கு தளத்தில் காலை 10.50 மணிக்கு வந்து இறங்கினார். அவரை அமைச்சர் கே.பி.அன்பழகன், துணை வேந்தர் பாஸ்கர், கலெக்டர் கருணாகரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் கவர்னர் மரக்கன்று நட்டார். பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு பகல் 12.15 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கவர்னர் புறப்பட்டு சென்றார்.


Next Story