கெங்கவல்லியில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
கெங்கவல்லியில் முத்தூட் மினி என்ற தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதிநிறுவனத்தில் பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி இந்த நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த 5½ கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இ
கெங்கவல்லி,
கெங்கவல்லியில் முத்தூட் மினி என்ற தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதிநிறுவனத்தில் பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி இந்த நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த 5½ கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நிதிநிறுவனத்தின் முன்னாள் மேலாளர் மருதை மணி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 5½ கிலோ தங்கநகைகளை போலீசார் மீட்டு ஆத்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கு ஆத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் தங்கநகைகளும் கோர்ட்டு மூலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நகை அடகு வைத்தவர்கள் தங்கள் நகையை திரும்ப தருமாறு நிதிநிறுவன நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். அவர்களிடம் நிதிநிறுவன மேலாளர் முருகேசன் நகைகள் அனைத்தும் கோர்ட்டில் உள்ளது. இதனால் திரும்ப தர முடியவில்லை என்று கூறினார். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று காலை நிதி நிறுவன மேலாளர் முருகேசன் நிதி நிறுவனத்தை திறக்க வந்தார். அப்போது சுமார் 20–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு எங்கள் நகைகளை திரும்ப தரும் வரை நிதிநிறுவனத்தை திறக்க விட மாட்டோம் என்றும், உயர் அதிகாரிகளிடம் பேசி கோர்ட்டில் இருந்து நகைகளை திரும்ப பெற்று எங்களிடம் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிதிநிறுவன மேலாளர் முருகேசன் நிதிநிறுவனத்தை திறக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.