சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மறியல் பெண்கள் உள்பட 141 பேர் கைது


சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மறியல் பெண்கள் உள்பட 141 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2016 4:45 AM IST (Updated: 28 Dec 2016 8:08 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 141 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் மறியல் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தம

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 141 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் மறியல்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சேலம் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் வெங்கடாசலம், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் 100–க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.

விவசாயிகள், கருகிய நெற்பயிர், பருத்தி, மஞ்சள் மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுடன் வந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

141 பேர் கைது

இதில், தமிழ்நாடு முழுவதும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை தொடங்க வேண்டும். பயிர்கள் கருகி அழிந்து போன நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.25 ஆயிரம், கரும்பு, மரவள்ளி ஆகியவற்றிற்கு ரூ.50 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரம், பாக்கு மஞ்சள், வெற்றிலை, ராகி, மிளகாய், பருத்தி போன்ற பயிர்களுக்கு பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடை தீவனம் மானிய விலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம், கால்வாய்களை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 94 பெண்கள் உள்பட 141 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story