பனப்பாக்கம் அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது ரோட்டில் ஆறாக ஓடிய டீசலை பொது மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்


பனப்பாக்கம் அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது ரோட்டில் ஆறாக ஓடிய டீசலை பொது மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 29 Dec 2016 5:00 AM IST (Updated: 28 Dec 2016 10:23 PM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதனால் ரோட்டில் ஆறாக ஓடிய டீசலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். வீட்டுக்குள் புகுந்து லாரி கவிழ்ந்தது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டீசல் ஏற்றிய லாரி ஒன்று வேலூ

பனப்பாக்கம்,

பனப்பாக்கம் அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதனால் ரோட்டில் ஆறாக ஓடிய டீசலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.

வீட்டுக்குள் புகுந்து லாரி கவிழ்ந்தது

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டீசல் ஏற்றிய லாரி ஒன்று வேலூர் மாவட்டம் நெமிலியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தது. லாரியை, சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சதீஷ் (வயது38) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று காலை பனப்பாக்கத்தை அடுத்த அகவலம் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டுக்குள் லாரி புகுந்து கவிழ்ந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்தது. அந்த நேரத்தில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த ஜெயலட்சுமி லாரி வேகமாக வருவதை பார்த்து அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

டீசல் பிடித்து சென்றனர்

லாரி கவிழ்ந்ததால் அதில் இருந்த டீசல் ரோட்டில் கொட்டி ஆறாக ஓடியது. இதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று குடம், கேன்கள், பாட்டில்கள், பாத்திரங்களை எடுத்து வந்து போட்டி போட்டுக்கொண்டு டீசலை பிடித்து சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு கருதி டீசல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்களை அங்கிருந்து விரட்டினர். ஆனாலும் பொதுமக்கள் டீசலை பிடித்துக்கொண்டுதான் சென்றனர்.

அதேபோன்று அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் மூலம் டீசலை பிடித்து ஆட்டோக்களில் நிரப்பி சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள்

இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று டீசல் கவிழ்ந்த பகுதியிலும், லாரி மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த டேங்கர் லாரி சரிசெய்யப்பட்டது.

டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரியால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வந்த தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களை போன்று 2 கேன்களில் டீசலை பிடித்து தீயணைப்பு வாகனங்களில் பத்திரமாக வைத்தனர்.

டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story