இனாம்காரியந்தல் ஊராட்சியில் முறைகேடாக பயன்படுத்திய குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை


இனாம்காரியந்தல் ஊராட்சியில் முறைகேடாக பயன்படுத்திய குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 28 Dec 2016 10:28 PM IST)
t-max-icont-min-icon

இனாம்காரியந்தல் ஊராட்சியில் முறைகேடாக பயன்படுத்திய குடிநீர் இணைப்புகளை கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் துண்டித்தனர். குடிநீர் தட்டுப்பாடு துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது தீபம் நகர். இங்கு 600–க்கும் மேற்பட்ட குடும்பத்த

கலசபாக்கம்,

இனாம்காரியந்தல் ஊராட்சியில் முறைகேடாக பயன்படுத்திய குடிநீர் இணைப்புகளை கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது தீபம் நகர். இங்கு 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மோட்டுசத்திரம் ஏரியில் இருந்து பெரிய குழாய் மூலம் தீபம்நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பின்பு சிறிய குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீபம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தீபம்நகர் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பெரிய குழாயில் இருந்து சிலர் நேரடியாக தங்கள் வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் இணைப்புகள் எடுத்துள்ளனர். அதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வரவில்லை.

முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

இதையறிந்த தீபம்நகர் பொதுமக்கள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்கந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியம்மாள் ஆகியோர் தீபம் நகர் பகுதிக்கு நேரில் சென்றனர். பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று முறைகேடாக பெரிய குழாயில் இருந்து குடிநீர் இணைப்பு எடுத்திருந்த 30–க்கும் மேற்பட்ட இணைப்புகளை கண்டுபிடித்தனர். பின்னர் பொக்லைன் மூலம் முறைகேடான இணைப்புகளை தோண்டி எடுத்து துண்டித்தனர். அப்போது ஊராட்சி செயலாளர் கார்த்தி மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


Next Story