கடந்த ஆண்டை விட அதிகம்: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 959 பேர் விபத்தில் பலி விழிப்புணர்வு கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 959 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார். விழிப்புணர்வு கூட்டம் தஞ்சை வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் விபத்து த
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 959 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்தஞ்சை வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு மேலாண்மை கூட்டம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள், மினி பஸ் உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
விபத்துகள் என்பது அலட்சியத்தால் நடப்பது தான். பெரும்பாலான விபத்துகள் தனியார் பஸ்களால் தான் ஏற்படுகிறது. எனவே பஸ் உரிமையாளர்கள், டிரைவர்களின் பொறுப்புகளை சுட்டிக்காட்ட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் 50 சதவீத விபத்துகளை தடுக்கலாம். உலக சுகாதார அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் 220 நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் 2020–ம் ஆண்டுக்குள் 50 சதவீத விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியாவும் கலந்து கொண்டது.
அதிவேகம்இந்தியாவில் கடந்த 2014–ம் ஆண்டு 4 லட்சத்து 89 ஆயிரத்து 4 விபத்துகள் ஏற்பட்டன. இதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 671 பேர் மரணம் அடைந்தனர். 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 2015–ம் ஆண்டு 5 லட்சத்து 1,423 விபத்துகள் நடந்தன. இதில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் மரணம் அடைந்தனர். 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். விபத்தில் இறந்தவர்களில் 15 வயது முதல் 30–வயதுக்குட்பட்டவர்கள் 54 சதவீதம் பேர் ஆவர். மேலும் டெல்லிக்கு அடுத்தபடி சென்னை தான் அதிக விபத்து நடக்கும் இடமாக உள்ளது. இதில் 25 சதவீதம் இருசக்கரவாகனத்தாலும், 41 சதவீதம் அதிவேகத்தினாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுகூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 935 பேர் விபத்தில் பலியானார்கள். இந்த ஆண்டு இதுவரை 959 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக தனியார் பஸ்களால் தான் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இதற்கு கவனக்குறைவு தான் காரணம். எனவே டிரைவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
தனியார் பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தக்கூடாது. பஸ்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களை சத்தமாக வைக்கக்கூடாது. வேகமாக ஓட்டக்கூடாது. பயணிகளை அதிக அளவில் ஏற்றிச்செல்லக்கூடாது. பாட்டுகளை கேட்டுக்கொண்டு பஸ்களை இயக்குவதால் டிரைவரின் கவனம் சிதற வாய்ப்புகள் உள்ளது. தஞ்சை– பட்டுக்கோட்டை சாலையில் தான் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது. எனவே தஞ்சை மாவட்டத்தில் விபத்து இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய பொறுப்புகள் பஸ்களின் உரிமையாளர்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் ராஜ்குமார் (தஞ்சை), முக்கண்ணன் (கும்பகோணம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மோட்டார்வாகன ஆய்வாளர் விஜயகுமார் வரவேற்றார். முடிவில் மோட்டார்வாகன ஆய்வாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.