திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சம்பா பயிரில் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்
திருவாரூர்,
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சம்பா பயிரில் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தலைவர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா, மாவட்ட தலைவர் சாமியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடரும்போராட்டம் குறித்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
வறட்சியால் விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளிவராதது வேதனை அளிக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது குறித்து முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். அரசு மவுனம் காக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர் ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.