தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி


தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 11:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடத்தூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார். தூர்வாரும் பணி தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்ம

தர்மபுரி,

தமிழகத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடத்தூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

தூர்வாரும் பணி

தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி பகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கடத்தூரில் உள்ள ஏரி தூர்வாரும் பணியை அவர் பொக்லைன் எந்திரம் ஓட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. இவற்றில் 37 ஆயிரத்து 500 ஏரிகள் மட்டுமே தற்போது உள்ளன. மீதமுள்ள 4500 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இதற்கு அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளே முக்கிய காரணம். ஏரிகளில் அரசு அலுவலகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மழைபெய்யும்போது மழைநீரை முறையாக சேகரித்து வைக்க முடியாத நிலை உருவாகிவிட்டது

தமிழகத்திற்கு தேவையான நீர்மேலாண்மை திட்டங்களை அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் செயல்படுத்தவில்லை.

நீர்பாசன திட்டங்கள்

தமிழகத்தில் மொத்தம் உள்ள விவசாய சாகுபடி பரப்பு 47 லட்சம் ஹெக்டேர். இதில் 17 லட்சம் ஹெக்டர் மானாவாரி சாகுபடி பரப்பு. மீதமுள்ள 30 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பாசனவசதி தேவையுள்ள விவசாய நிலங்கள் ஆகும். தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை முழுமையாக செயல்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி தேவை. இதன்படி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஓதுக்கீடு செய்து நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் தமிழகத்தின் சராசரி மழையளவான 922 மி.மீ. மழையால் கிடைக்கும் நீரை கடலில் கலக்காமல் சேமிக்க முடியும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் செழுமையான பகுதியாக மாறும்.

பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தமிழகத்தில் இதுவரை 1,000 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2001–2002–ம் ஆண்டுகளில் 100 ஏரிகளை தூர்வாரி உள்ளோம்.

மக்கள் இயக்கம்

ஏரிகளை தூர்வாரும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுத்த வேண்டும். பா.ம.க.விற்கு 5 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு கிடைத்தால் தமிழகத்தில் நீராதாரங்களை பாதுகாக்கவும், விவசாயத்தையும், விவசாயிகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 610 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 10 நீர்பாசன திட்டங்களை ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தினால் இந்த மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேலைதேடி வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்றுள்ள நிலை மாறும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார்.

பணிநீக்கம் செய்ய வேண்டும்

இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொம்மிடி ரெயில்நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ரெயில் பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

பொம்மிடி ரெயில்நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த வழியாக திருப்பதி செல்லும் 2 ரெயில்கள் பொம்மிடி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாவட்ட தலைவர் மதியழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், வஜ்ஜிரம், பிரபு நகரசெயலாளர் சத்தியமூர்த்தி, பச்சியப்பன் இளைஞர் சங்க மாநில செயலாளர்கள் செந்தில், முருகசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story