தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததால் படுகாயம் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
ராமநாதபுரம் நகருக்குள் தண்ணீரை தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறின. படுகாயமடைந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து காட்டுபகுதிக்குள் விட்டனர். புள்ளிமான் ராமநாதபுரம் நகரின் நுழைவு எல்லை பகுதியில் சிதம்பரனார் ஊருணி பின்புறம் உ
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகருக்குள் தண்ணீரை தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறின. படுகாயமடைந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து காட்டுபகுதிக்குள் விட்டனர்.
புள்ளிமான்ராமநாதபுரம் நகரின் நுழைவு எல்லை பகுதியில் சிதம்பரனார் ஊருணி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக நேற்று காலை அழகிய புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. இந்த மான் சிதம்பரனார் ஊருணி பகுதியில் தண்ணீர் அருந்த சென்றபோது புள்ளிமானை கண்ட அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த மான் அங்கும் இங்கும் ஓடியது. மானை விடாமல் துரத்திய நாய்கள் அதை கடித்து குதறின.
இதில் மானிற்கு கால், தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. நாய்கள் துரத்தி கடித்ததால் புள்ளி மான் அந்த வழியாக வேகமாக ஓடிவந்தது. இதனை கண்ட பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டனர். பொதுவாக மான் இனத்திற்கு லேசான அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதன் இதயம் வீங்கி வெடித்து இறந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
சிகிச்சைஇதன்காரணமாக புள்ளிமானை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அதன் கண்களை துணியால் கட்டி அதிர்ச்சியடையாமல் பாதுகாத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறை வனச்சரக அலுவலர் ஞானப்பழம் தலைமையிலான ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று புள்ளி மானை கைப்பற்றி, கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் புள்ளி மானிற்கு சிகிச்சை அளித்தனர்.
உரிய நேரத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் புள்ளி மான் உடல்நலம் தேறி துள்ளி குதித்தது. வனத்துறையினர் புள்ளி மானை பத்திரமாக காரில் கொண்டு சென்று கமுதக்குடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர். பருமழை பொய்த்து போனதால் நீர்ஆதாரங்கள் வறண்டுபோய்விட்டன.
மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரியும் மான் உள்ளிட்ட விலங்கினங்கள் நகருக்குள் தண்ணீரை தேடி வருவதும், அவை வாகனங்களில் மோதியும், நாய்கள் கடித்தும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் நகரில் காட்டுப்பகுதி இல்லாததால் இதுவரை மான் உள்ளிட்ட காட்டு விலங்கினங்கள் வந்ததில்லை. முதன்முதலாக தற்போது வந்துள்ள மான் உத்தரகோசமங்கை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.