ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பினால் பொதுமக்களுடன் வாக்குவாதம்: வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் சங்க பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு


ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பினால் பொதுமக்களுடன் வாக்குவாதம்: வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் சங்க பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் மோதல் உருவாகி வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்

கோவை,

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் மோதல் உருவாகி வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள முன்னோடி வங்கி முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியம் பேசியதாவது:–

கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி முதல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அது முதல் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்தை அதிக அளவில் கேட்கும் போது மத்திய அரசின் உத்தரவினால் எங்களால் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் சில சமயங்களில் பொதுமக்களுக்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவாகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பபு அளிக்க வேண்டும். கடந்த நவம்பர் 8–ந் தேதி முதல் இதுநாள் வரை வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 160–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் மற்றும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

வெளிப்படை தன்மை வேண்டும்

வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தற்போது உள்ள இறுக்கமான சூழ்நிலையை போக்க வங்கிகளுக்கு போதிய அளவு பணம் வழங்க வேண்டும். வங்கிகளுக்கு பணம் தருவதில் வெளிப்படை தன்மை வேண்டும். பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் சிக்குகின்றன. அவர்களுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்த வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. எனவே பணத் தட்டுப்பாட்டை மத்திய அரசு போக்காமல் வங்கி தொழிற்சங்கங்களுடன் உள்ள மோதல் போக்கை கைவிட வேண்டும். இதே நிலை நீடித்தால் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் சசீதரன், வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.



Next Story