கலெக்டர் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி மனு கொடுத்தனர்


கலெக்டர் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்சாலை திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர

பெரும்பாறை அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்சாலை

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லவே லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

அதேபோல் புலையன்வளைவு கிராமத்தில் சுமார் 30–க்கும் மேற்பட்ட ஆதிவாசிகளின் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து புல்லாவெளி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை வசதி இல்லை. இப்பகுதியில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும்பாறைக்கும், சோலைக்காட்டுக்கும் செல்ல வேண்டும். மேலும் பெரும்பாறை, அய்யம்பாளையம், போன்ற பகுதிகளில் உள்ள விடுதியில் தங்கியும் படிக்கின்றனர்.

டோலி கட்டி...

இப்பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகளை டோலி கட்டி கரடு, முரடான பாதை வழியாக தூக்கி செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. அதேபோல் அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் 6 கி.மீ. தூரத்தில் உள்ள சோலைக்காட்டுக்கு தான் செல்லவேண்டும்.

கடந்த 45 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மண்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று பெரும்பாறையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் அதிகாரிகளுடன் காரில் சென்றார். இதையறிந்த புல்லாவெளி, புலையன்வளைவு கிராம மக்கள் தங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் காரை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story