வறட்சி பாதிப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் தேனியில் என்.ஆர்.தனபாலன் பேட்டி
தமிழகத்தில் வறட்சி பாதிப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார். என்.ஆர்.தனபாலன் பேட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென்மண்டல இளைஞர் அணி சார
தேனி,
தமிழகத்தில் வறட்சி பாதிப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார்.
என்.ஆர்.தனபாலன் பேட்டிபெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென்மண்டல இளைஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு என்.ஆர்.தனபாலன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேனி மாவட்டம், வைகை அணையில் முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி, முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். காமராஜர் ஆட்சியில் நதிநீர் வீணாகாமல் தடுக்க பல அணைகள் கட்டப்பட்டன. வைகை அணையை கட்டிய காமராஜரின் நினைவாக அங்கு ஒரு சிறு கல்வெட்டு மட்டுமே உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்டி, வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதை தவறாக சொல்லவில்லை. பென்னிகுவிக் தனது சொத்துக்களை விற்று இந்த அணையை கட்டினார். அவரின் தியாகம் போற்றக்கூடியது. அதேபோன்று ஏழைகளுக்காக வாழ்ந்த, ஏழையாகவே வாழ்ந்த காமராஜருக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். காமராஜருக்கு மணிமண்டபம் கட்டத் தவறினால், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தேனியில் 50 ஆயிரம் பேரை திரட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார்தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டே மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி இருக்க வேண்டும். ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார், கபடி விளையாட்டை முன்னிலைப்படுத்தி, கபடியை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று அதனை அழியாமல் பாதுகாத்தார். அவருடைய மகனும், ‘தினத்தந்தி’ அதிபருமான டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் கபடியை ஒலிம்பிக் வரை கொண்டு சென்று சிறப்பு சேர்த்தார். இதனால் கபடி போட்டி தற்போது அழியாமல், புகழ் பெற்றுள்ளது.
அதேபோன்று தமிழகத்தின் கலைகளை, வீர விளையாட்டுகளை பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி வருகிற 3–ந்தேதி அலங்காநல்லூரில் தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் பங்கேற்கும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 45 விவசாயிகள் இறந்துள்ளனர். சட்டசபையை கூட்டி, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
செயற்கை தீர்மானம்தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் கிட்டத்தட்ட அரசியல்வாதி போல் பேசுகிறார். அவரை உடனே கைது செய்ய வேண்டும். அப்போது தான் மற்ற அதிகாரிகள் இனிமேல் தவறு செய்யாமல் இருப்பார்கள். அ.தி.மு.க.வில் செயற்கையாக தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். தேனி பங்களாமேடு திட்டச்சாலையை ஒரு வழிப்பாதையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் விஜய்மாரீஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.