தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி விவசாய சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் மனு


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி விவசாய சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 29 Dec 2016 3:45 AM IST (Updated: 29 Dec 2016 2:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அவினாசி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தாலுகா அலுவலகத்தில் மனு தமிழகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி

அவினாசி,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அவினாசி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தாலுகா அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களும் கருகி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதோடு, கால்நடைகளையும் வளர்க்க முடியாமல் திணறி வருகிறார்கள். எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் பழனிசாமி, செயலாளர் வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 200–க்கும் மேற்பட்டோர் அவினாசி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் துணை தாசில்தார் ராகவியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

இழப்பீடு

தமிழ்நாடு முழுவதும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை தொடங்க வேண்டும். தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்கள் கருகி அழிந்து போன நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.25ஆயிரம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

வறட்சியின் காரணமாக பயிர் செய்ய இயலாமல் தரிசாக போடப்பட்டுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கால்நடை தீவனம் மானிய விலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலையின்றி வாடும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Next Story