அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி பட்டதாரி பெண் உள்பட 2 பேர் கைது


அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி பட்டதாரி பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2016 3:39 AM IST (Updated: 29 Dec 2016 3:39 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி பட்டதாரி பெண் உள்பட 2 பேர் கைது

திருச்சி,

வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த பட்டதாரி பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி

திருச்சி தீரன்நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவர் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த மே மாதம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், “அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண் மற்றும் சிலர், 15 பேரிடம் ரூ.42 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் கூறி இருந்தார். இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதிகாரி போல் நடித்து

விசாரணையில், சென்னை போரூரை சேர்ந்த உமா (35) என்ற பட்டதாரி பெண், திருச்சி தீரன்நகரை சேர்ந்த என்ஜினீயர் விவேக்ராவ் (27), அதேபகுதியை சேர்ந்த நந்த குமார் ஆகிய 3 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சென்னை போரூரை சேர்ந்த உமா, தான் ஐ.ஆர்.எஸ்.அதிகாரி என்றும், வருமானவரித்துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருவதாகவும் நடித்து, போலி ஆவணத்தை காட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாகவும், இதேபோல் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

பெண் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து உமா, விவேக்ராவ் ஆகிய 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நந்தகுமாரை தேடி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்ட உமா மீது ஏற்கனவே அரசு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தருவதாகவும், அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கும் உள்ளது. இதுவரை இவர் ரூ.1 கோடியே 17 லட்சம் வரை மோசடி செய்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story