பெரம்பலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பெரம்பலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:04 AM IST (Updated: 29 Dec 2016 4:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை


பெரம்பலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோதண்டராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகமும், வெண்ணெய் சாற்றி செந்தூரம் அணிவித்து மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேக ஆராதனையை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள கம்பம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து, செந்தூரம் மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. இரவு வடைமாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.

தெப்பக்குளம் ஆஞ்சநேயர்

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில் பின்புறம் தெப்பக்குளம் கிழக்குகரையில் அமைந்துள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சன்னதியில் பாதுகா சேவா சமிதி சார்பில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு அபிஷேகம் செய்தும், வெற்றிலை, வடைமாலை அணிவித்தும் மகாதீபாராதனை நடந்தது. பூஜைகளை மணிகண்டன் அய்யர், ரெங்கராஜன் அய்யங்கார் ஆகியோர் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மதனகோபால சுவாமி கோவில் புரோகிதர் நாராயணஅய்யர், சமிதி தலைவர் மயூரப்பிரியன், அகிலாசம்பத், வழக்கறிஞர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கச்சேரி விநாயகர் கோவில்

பெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று இரவு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேக ஆராதனையை கோவில் அர்ச்சகர் சஞ்சீவிராவ், பிரசாத் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வழித்துணை ஆஞ்சநேயர் கோவில்

ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் அருகே பூமலை சஞ்சீவிராயர் மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்ச நேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, நேற்று அனுக்ஞை, தன பூஜை, கலச பூஜை, சுப்ரபாதம், சுதர்சன ஹோமம், கும்ப அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன, பின்னர் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மகாஅபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை பட்டாச்சாரியார்கள் கோவிந்தசாமி, குப்புசாமி, சீனிவாசன்
ஆகியோர் நடத்தினர்.

இதில், பாடாலூர், திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம், இரூர், ஆலத்தூர்கேட், காரை, தெரணி, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், செட்டிகுளம், கூத்தனூர், புதுக்குறிச்சி, சீதேவிமங்கலம், நாட்டார்மங்கலம், மருதடி, சிறுவாச்சூர், சிறுகன்பூர், வரகுபாடி, மாவலிங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story