திருக்கழுக்குன்றம் அருகே வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருக்கழுக்குன்றம் அருகே வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜீப் சிறை பிடிப்பு காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் அந்த பகுதியை சேர்ந்த இந்த
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் அருகே வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜீப் சிறை பிடிப்புகாஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் அந்த பகுதியை சேர்ந்த இந்துக்கள் விழாக்காலங்களில் பாரிவேட்டை நடத்தி பெருமாள் நாமத்தை வரைந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இங்கு உள்ள பரிவட்டகுன்று என்று அழைக்கப்படும் குன்றின் ஒரு பகுதியில் அழகுசமுத்திரம் ஊராட்சிக்கு அருகில் உள்ள சோகண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த சிலர் சில ஆண்டுகளாக சிலுவை மற்றும் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த மலைக்குன்றில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் பகுதியில் இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு மலைப்பகுதியில் மேலும் சில பகுதியில் புதிதாக சிலுவைகள் மற்றும் சிலைகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அகற்றக்கோரி கடந்த 24–ந் தேதி அழகுசமுத்திரம் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் 26–ந் தேதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தாரின் ஜீப்பை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
சாலை மறியல்இது தொடர்பாக நேற்று முன்தினம் இரு பிரிவினரையும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து தாசில்தார் தலைமையில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் அதிகாரிகள் அவர்களிடம் நாளை (நேற்று) செங்கல்பட்டு சார்ஆட்சியர் பிரச்சினைக்குரிய இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பாரென தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் தெரிவித்தபடி நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் செங்கல்பட்டு–திருக்கழுக்குன்றம் சாலை புல்லேரி சந்திப்பில் நேற்று 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவாய்த்துறையினரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைஇது குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஆய்வாளர்கள் ருக்மாங்கதன், அனுமந்தன் உள்ளிட்ட போலீஸ் துறை மற்றும் வருவாய்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வார்தா புயல் பாதிப்பு சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு மத்திய குழு வருகை தந்துள்ளதால் சார் ஆட்சியர் இந்த பகுதிக்கு வருகை தர முடியவில்லை. நாளை (இன்று) சார் ஆட்சியர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பார் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.