சக மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இளையான்குடி அருகே சக மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தகராறு இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் குடியரசன்(வயது 33). தற்போது பரமக்குடி வைகை நகரில் வசித்து வருகிற
இளையான்குடி,
இளையான்குடி அருகே சக மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தகராறுஇளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் குடியரசன்(வயது 33). தற்போது பரமக்குடி வைகை நகரில் வசித்து வருகிறார். இவர் குமாரக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் குணசேகரன்(20). இவர் இளையான்குடியை அடுத்த குமாரக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று குணசேகரன் தனது நண்பர்கள் பரமக்குடியை சேர்ந்த அரிகரன், குருமூர்த்தி ஆகியோருடன் கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரக்குறிச்சி அருகே ஆசிரியர் குடியரசன் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மீது குணசேகரன் மோதிவிட்டார். இதில் குடியரசனுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
வழக்குப்பதிவுஇதுகுறித்து ஆசிரியர் குடியரசன் இளையான்குடி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திவிட்டனர் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதேபோல் குணசேகரன் அளித்த புகாரில், தன்னையும், நண்பர்கள் அரிகரன், குருமூர்த்தி ஆகியோரையும் ஆசிரியர் குடியரசன் தாக்கியதாகவும், இதில் 3 பேரும் காயமடைந்துள்ளதாகவும், அதிலும் குருமூர்த்திக்கு படுகாயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் குடியரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போராட்டம்இந்தநிலையில் நேற்று காலை குணசேகரன் படிக்கும் தனியார் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து சாலையோரத்தில் நின்று திடீர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் குணசேகரன் உள்பட 3 கல்லூரி மாணவர்களை தாக்கிய ஆசிரியரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கண்ணதாசன், சப்–இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட போலீசார் கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன் கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், குடியரசன் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் காண்பித்தார். மேலும் அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.