ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தாமதம் இல்லாமல் சம்பள பட்டுவாடா செய்ய மாற்று ஏற்பாடு தேவை நகரசபை நிர்வாகத்துக்கு கோரிக்கை


ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தாமதம் இல்லாமல் சம்பள பட்டுவாடா செய்ய  மாற்று ஏற்பாடு தேவை நகரசபை நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 6:52 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தாமதம் இல்லாமல் சம்பள பட்டுவாடா செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் விருதுநகர் நகராட்சியில் தேவைக்கு ஏற்ப நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லா

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தாமதம் இல்லாமல் சம்பள பட்டுவாடா செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணியாளர்கள்

விருதுநகர் நகராட்சியில் தேவைக்கு ஏற்ப நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையிலும், புதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளிக்காத நிலையிலும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தினசரி ஊதியம் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளபடி ரூ.188 வழங்கப்படுகிறது.

தாமதம்

இவர்களுக்கு மாதாந்திர சம்பளம் வழங்குவதில் வழக்கமாகவே தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் சம்பள பட்டுவாடாவில் மிகுந்த கால தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடி காரணமாக நகராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் நகராட்சி நிர்வாகம் சம்பளத்திற்காக காசோலை வழங்கிய பின்னரும் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலையில் பட்டுவாடாவிற்கு மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அடிக்கடி ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவை

நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களுக்கான சம்பள தொகையை காசோலைகளாக மகளிர் சுயஉதவிக்குழுவிடம் வழங்கி விடுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் குழுக்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் காசோலைகளை டெபாசிட் செய்து பின்னர் அதை பணமாக மாற்றி சம்பள பட்டுவாடாவிற்கு சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கொடுக்கின்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவினர் வேறு பணியில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு வந்து பணம் எடுத்து தருவதற்கே ஓரிரு நாட்கள் தாமதம் ஆகிறது.

அதிலும் தற்போது வங்கி கணக்கில் இருந்து வாரம் ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாத நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கான சம்பள தொகை ரூ.2 லட்சத்தை மூன்று வங்கி கணக்குகளில் இருந்து எடுக்க குறைந்த பட்சம் 3வாரங்கள் ஆகின்றது. அதற்குள் ஒரு மாதம் கடந்து விடுகிறது. இதனால் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களின் சம்பள பட்டுவாடாவிற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

கோரிக்கை

எனவே நகராட்சி நிர்வாகம் நேரடியாகவே ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தாமதம் இல்லாமல் சம்பள பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story