தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தனியார் அனல்மின் நிலையம்–கப்பல் தளம்; ஒப்பந்தம் கையெழுத்தானது
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 525 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட அனல் மின்நிலையம் மற்றும் அதற்கு தேவையான நிலக்கரி கையாள கப்பல் தளம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அனல்மின் நிலையம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் சென்னை எஸ்.இ.பி.சி.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 525 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட அனல் மின்நிலையம் மற்றும் அதற்கு தேவையான நிலக்கரி கையாள கப்பல் தளம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அனல்மின் நிலையம்தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் சென்னை எஸ்.இ.பி.சி. பவர் நிறுவனம் சார்பில், ரூ.3 ஆயிரத்து 514 கோடி செலவில் 525 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்காக, துறைமுகத்தில் அந்த தனியார் நிறுவனம் சார்பில் ரூ.150 கோடி செலவில் கப்பல் தளம் அமைக்கப்பட உள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்துஇதற்கான நில குத்தகை ஒப்பந்தத்தை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ் மற்றும் எஸ்.இ.பி.சி. பவர் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்கா பெடா சுப்பையா ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். சலுகை ஒப்பந்தத்தில் துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் நடராஜன் மற்றும் எஸ்.இ.பி.சி. பவர் நிறுவன துணை தலைவர் சத்யகுமார் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
2019–ம் ஆண்டில்...
இந்த அனல்மின் நிலையம் அமைக்க 36.81 ஹெக்டேர் நிலத்தை துறைமுகம் ஒதுக்கி உள்ளது. அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கையாளுவதற்கு கேப்டிவ் கப்பல் தளம் கட்டுமானத்திற்காக 180 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் அளவிலான பகுதியையும் துறைமுகம் ஒதுக்கி உள்ளது.
அனல் மின் நிலையத்தின் செயல்பாட்டுக்கு ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் நிலக்கரி துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படவிருக்கும் கன்வேயர் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையமானது வருகிற 2019 ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.