மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் மனைவி, மகள் பலி மதுபோதையில் இருந்த டிரைவர் கைது
தூத்துக்குடியில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மனைவி, மகள் பரிதாபமாக பலியாகினர். மின்வாரிய ஊழியர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மதுபோதையில் இருந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மின்வாரிய ஊழிய
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மனைவி, மகள் பரிதாபமாக பலியாகினர். மின்வாரிய ஊழியர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மதுபோதையில் இருந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மின்வாரிய ஊழியர்தூத்துக்குடி சின்னமணி நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்கரேசுவரி, மகள் ராதிகா (17). சரவணன் நேற்று முன்தினம் இரவு மனைவி, மகளுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பஜாரில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு இருந்து நள்ளிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர்.
தூத்துக்குடி–பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே வந்து கொண்டு இருந்த போது, பின்னால் ஒரு கார் வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார், மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
மனைவி–மகள் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரோட்டில் விழுந்த சங்கரேசுவரி, ராதிகா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். சரவணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சங்கரேசுவரி, ராதிகா ஆகியோர் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுபோதையில் டிரைவர்இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (42) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியரின் மனைவி, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.