கடலூரில் 130 போலீசார்– ஊர்க்காவல்படையினர் ரத்த தானம்


கடலூரில் 130 போலீசார்– ஊர்க்காவல்படையினர் ரத்த தானம்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 9:31 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நடந்த முகாமில் 130 பேர் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாம் கடலூர் மாவட்ட ஊர்க்காவல்படை, போலீசார் இணைந்து சிறப்பு ரத்ததான முகாமை போலீஸ் மருத்துவமனையில் நேற்று நடத்தினர். முகாமை மாவட்ட போலீஸ் சூப்பி

கடலூர்,

கடலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நடந்த முகாமில் 130 பேர் ரத்ததானம் செய்தனர்.

ரத்ததான முகாம்

கடலூர் மாவட்ட ஊர்க்காவல்படை, போலீசார் இணைந்து சிறப்பு ரத்ததான முகாமை போலீஸ் மருத்துவமனையில் நேற்று நடத்தினர். முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுரேந்திரகுமார், துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், திருமலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 100 ஊர்க்காவல் படையினர், 30 போலீசார் ரத்ததானம் வழங்கினர். அதிக முறை ரத்ததானம் செய்த 7 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முகாமில் மருத்துவமனை தலைமை மருத்துவர் சாராஜெலின் பால், ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சாய்லீலா மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

130 பேர் ரத்ததானம்

பின்னர் இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ஆண்டுக்கு 6 ஆயிரம் யூனிட் ரத்தம் சேமித்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரத்து 500 யூனிட் ரத்தம் தான் சேமித்து வைத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசாரும், ஊர்க்காவல்படையினரும் இணைந்து ரத்தம் வழங்க முடிவு செய்து, இந்த முகாமை நடத்தினோம். இந்த முகாமில் 130 பேர் ரத்ததானம் கொடுத்துள்ளனர். விலைமதிப்பில்லா உயிரை காப்பாற்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும் என்றார்.

முகாமில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஊர்க்காவல்படை எழுத்தர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story