செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதாகக்கூறி என்.எல்.சி. தொழிலாளியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாமிர்தம்(வயது 60). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளியான இவர், ரூ.20 லட்சம் வரையில் மத்திய அரசு அறிவித்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த பணத்தை மாற்றி தருவத
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாமிர்தம்(வயது 60). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளியான இவர், ரூ.20 லட்சம் வரையில் மத்திய அரசு அறிவித்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த பணத்தை மாற்றி தருவதாக கடலூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலர் பஞ்சாமிர்தத்திடம் கூறி, அவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை பெற்றனர்.
இந்த நிலையில் நீண்ட நாளாகியும் அவர்கள் பஞ்சாமிர்தத்திடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பணத்தை பெற்றவர்களிடம் அவர் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. இது குறித்து பஞ்சாமிர்தம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வந்தனர். விசாரணையில் சேத்தியாத்தோப்பு புதுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்தீபன்(25), கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த காமராஜ் மகன் கண்ணன்(31) மற்றும் சிலர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பார்த்தீபன், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.