பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:00 AM IST (Updated: 29 Dec 2016 11:03 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகைக்கு உழவர்

நாகப்பட்டினம்,

நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகைக்கு உழவர் திருநாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆண்டுதோறும் வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு, அதற்கு பொட்டு வைத்து பானையை சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கலை வரவேற்பார்கள். தற்போது மண்பானையின் பயன்பாடு குறைந்து பித்தளை, அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும் பொங்கல் பண்டிகையன்று மண் பானையில் பொங்கலிடுவதை தமிழர்கள் இன்றும் நடைமுறையில் வைத்துள்ளனர். இருந்தாலும் மண் பாண்டங்களின் பயன்பாடுகள் குறைந்துவிட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் நலிவடைந்து அந்த தொழிலை விட்டு வேறு தொழில்களில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

மண் பானை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், ஆங்காங்கே இருக்கும் ஒருசில மண்பாண்ட தொழிலாளிகள் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகையை அடுத்த நாகூர் குயவர்தெருவில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை, சட்டி, அகல் விளக்கு, பூந்தொட்டி, பொம்மை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் நாகை, நாகூர், மஞ்சக்கொல்லை, புத்தூர், பாப்பாகோவில், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முக்கிய தேவையான களிமண் கிடைக்காததாலும், பானைகளை வேகவைக்க பயன்படுத்தப்படும் விறகு உள்ளிட்ட எரி பொருட்கள் கிடைக்காததாலும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பித்தளை, அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


Next Story