புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:00 AM IST (Updated: 30 Dec 2016 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் நாளை மறுநாள்(31-ந்தேதி) உடன்

ஊட்டி,

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

நாளை மறுநாள்(31-ந்தேதி) உடன் 2016-ம் ஆண்டு முடிவடைகிறது. அன்று நள்ளிரவில் 2017-ம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை கொண்டாடுவதற்கு பல்வேறு நட்சத்திர விடுதிகள் தயாராகி வருகின்றன. ஊட்டியில் ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் இரவு நேர கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பல்வேறு ஓட்டல்களில் அலங்கார விளக்குகளை கொண்டு ஜொலிக்க வைத்து உள்ளனர். மேலும் இந்த புத்தாண்டை கொண்டாட ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

1000 போலீசார் பாதுகாப்பு

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்ட எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் 9 பேர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 28 பேர் என மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள், மசூதிகளில் போதிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மாவட்ட எல்லைகள் தீவிர கண்காணிப்பு

நீலகிரி மாவட்ட எல்லைகளான கக்கநல்லா, பாட்டவயல், நாடுகாணி, குஞ்சப்பனை உள்ளிட்ட 14 சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா, தொட்டபெட்டா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடும் நடவடிக்கை

புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்காக முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் இனிவரும் நாட்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். புத்தாண்டிற்கு ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story