ஊராட்சி ஒன்றிய தற்காலிக பணியாளர் சாவில் மர்மம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


ஊராட்சி ஒன்றிய தற்காலிக பணியாளர் சாவில் மர்மம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Dec 2016 3:45 AM IST (Updated: 30 Dec 2016 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி, தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக தற்காலிக பணியாளர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம

ஆண்டிப்பட்டி,

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக தற்காலிக பணியாளர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக பணியாளர்

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 54). இவர் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவதற்காக சின்னமனூர் பகுதியில் உள்ள ஒருவரிடம் பணம் வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேகர் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பிணமாக கிடந்தார். ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி அவர் பலியானதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாவில் மர்மம்

இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து சேகரின் உடலை அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் கள் ஒப்படைத்தனர். அப்போது அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். மேலும் சேகர் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி இறக்கவில்லை என்றும், அவரை சிலர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் உறவினர்கள் புகார் கூறினர்.
அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் நடவடிக்கை

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னர் சேகரின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இதற்கிடையே அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் தேனி- மதுரை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story