அனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு


அனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:38 AM IST (Updated: 30 Dec 2016 4:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை, அனுமன் ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி த

புதுக்கோட்டை,

அனுமன் ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி புதுக்கோட்டை பிருந்தாவனத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அறந்தாங்கி

அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விஸ்வரூப ஆஞ்ச நேயருக்கு பால், பழம், தேன், மஞ்சள், சந்தனம், வெண்ணெய், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, திரவியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வடைமாலை சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பொன்னமராவதி அருகே வேகுபட்டி விஸ்வரூவ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி 27 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்ச நேயர் சிலைக்கு சிறப்பு வழி பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு ஆஞ்ச நேயர் திருவீதியுலா நடைபெற்றது.

வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் உள்ள மூகாம்பிகை சமேத சொர்ணபுரிஸ்வரர் கோவிலில் அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மேலைச்சிவபுரி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவரங்குளம், ஆவுடையார்கோவில்

திருவரங்குளத்தில் 9 தீர்த்தக் குளங்களில் பிரதான தீர்த்தக் குளமான நைனாரி குளக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜெய் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர், பழங்கள் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள், வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆவுடையார்கோவில் அக்ரகாரத்தில் உள்ள அஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேற்கண்ட கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story