கூடலழகர் பெருமாள் மீது பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண வரலாறு


கூடலழகர் பெருமாள் மீது பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண வரலாறு
x
தினத்தந்தி 30 Dec 2016 5:35 AM IST (Updated: 30 Dec 2016 5:35 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கூடலழகர் பெருமாள் மீது, பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை,

மதுரையில் கூடலழகர் பெருமாள் மீது, பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புராண வரலாறு

மதுரையில் 108 வைணவ திருத்தலங்களில் புகழ் பெற்றதும், அஷ்டாங்க விமானம் அமையப்பெற்ற புண்ணியத் தலமான பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார். மதுரையை ஆண்ட வல்லப தேவ பாண்டிய மகாராஜனுக்கு, பரம்பொருள் யார் என்ற சந்தேகம் இருந்தது. அதை போக்குபவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையறிந்து வந்த பெரியாழ்வார், ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று விளக்கி பாட, பொற்கிழி தானாக பெரியாழ்வரிடம் வந்தது. இதைப்பார்த்த மன்னன் அகமகிழ்ந்து, பெரியாழ்வாரை பட்டத்து யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தான். மெய்க்காட்டும் (மேங்காட்டுப் பொட்டல், ஜான்சிராணி பூங்கா) பொட்டல் அருகே வந்த போது, பெருமாள் கருட வாகனத்தில் காட்சி அளித்தார்.

பெருமாளின் அருள் திருமேனியை அனைவரும் பார்த்ததால், அவருக்கு திருஷ்டி பட்டுவிடுமே என்று எண்ணிய பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பதிகத்தை பாடினார். இந்த புராண வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் திருப்பல்லாண்டு தொடக்க விழா நடந்து வருகிறது.

திருப்பல்லாண்டு தொடக்கம்

அதன்படி இந்த வருடத்திற்கான விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு கோவிலில் உள்ள உற்சவர் பெருமாள் திருமஞ்சனமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கூடலழகர் பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை மீதும் எழுந்தருளி மெய்க்காட்டும் பொட்டலுக்கு வந்தனர்.

அங்கு வல்லப தேவ பாண்டிய மன்னரின் சந்தேகத்தை போக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு பெரியாழ்வாருக்கு பொற்கிழியும், பாராட்டு மரியாதையும் வழங்கும் நிகழ்ச்சிகளும், திருப்பல்லாண்டு தொடக்கமும் நடந்தன. இதில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பல்லாண்டு தொடக்க புராண வரலாற்று நிகழ்வுகளை பயபக்தியுடன் தரிசித்து, பெருமாளை வழிபாடு செய்தனர்.

அதைத்தொடர்ந்து பெருமாளும், ஆழ்வாரும் பெரிய வளையல்காரத் தெரு வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, இரவு 10.30 மணிக்கு மேல் திருக்கோவிலுக்கு சென்றடைந்தனர். ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் அனிதா, தக்கார் செல்லத்துரை, மதராஸ் தேசம் நடுமண்டலம் கவுரவ ரத்தின வியாபாரிகள் மகமை கடை சங்க நிர்வாகிகள் வி.ஆர்.ஆனந்த், சுரேஷ், பாலா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story