விளாத்திகுளம் அருகே பரிதாபம் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால் வயலில் வி‌ஷம் குடித்தார்


விளாத்திகுளம் அருகே பரிதாபம் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால் வயலில் வி‌ஷம் குடித்தார்
x
தினத்தந்தி 31 Dec 2016 2:00 AM IST (Updated: 30 Dec 2016 6:04 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே, பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி வயலில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே, பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி வயலில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கம்பத்துபட்டியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 58). விவசாயி. இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார். இவர், ஊருக்கு அருகில் உள்ள தனது 10 ஏக்கர் நிலத்தில் மானாவாரி பயிர்களை பயிரிட்டு இருந்தார். 5 ஏக்கரில் மக்காச்சோளமும், மற்ற நிலங்களில் கம்பு, பாசி, மிளகாய் போன்றவையும் பயிரிட்டு இருந்தார்.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அனைத்து பயிர்களும் மழையின்றி கருகின. இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று மாலையில் பவுன்ராஜ் வயலுக்கு சென்றார்.

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து...

அப்போது பயிர்கள் தண்ணீரின்றி கருகி இருந்ததைப் பார்த்து பவுன்ராஜ் வேதனை அடைந்துள்ளார். பின்னர் அவர் பயிர்களுக்கு தெளிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு வயலில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புகோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு முதலதுவி சிகிச்சை அளித்த பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுரை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் நேற்று அதிகாலையில் பொன்ராஜின் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பவுன்ராஜின் வீட்டுக்கு சென்று, அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க.வினர் அஞ்சலி

இறந்த பவுன்ராஜின் உடலுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் என்.பெரியசாமி (தெற்கு), சுப்பிரமணியன் (வடக்கு), கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் வசந்தம் ஜெயகுமார், அவை தலைவர் பெருமாள் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறந்த பவுன்ராஜூக்கு மனைவி மற்றும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பயிர்கள் கருகியதால், வயலில் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story