தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை


தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 9:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்க

தஞ்சாவூர்,

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் சிலர், கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அவர்கள், போதிய தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட கலெக்டர் அண்ணாதுரை உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, கேரள மாநிலம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் 20–க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறுவை சாகுபடி 5 ஆண்டுகளாக பாதித்தும், தமிழகத்தின் சராசரி மழைஅளவு 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்படவிலலை. எனவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கருகிய பயிரை கண்டு மனஉளைச்சலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கோடை சாகுபடிக்கு உளுந்து, எள் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.

ஆடு, மாடுகள் மேயும் நிலை

திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க தலைவர் ரெங்கசாமி, செயலாளர் சின்னத்துரை, பொருளாளர் முருகேசன் ஆகியோர் கூறும்போது, கர்நாடக மாநிலம் தமிழகத்திற்குரிய தண்ணீரை கொடுக்க மறுத்ததாலும், பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. சம்பா சாகுபடி செய்வதற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி வீட்டில் இருந்து நகை மற்றும் பொருட்களை அடகு வைத்தும், கந்து வட்டிக்கு கடன் வாங்கியும் நெல் சாகுபடி செய்தனர். ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. பல இடங்களில் நெல் பயிர்களை ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இதனால் மனஉளைச்சலில் 30–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நிலைமையை மத்தியஅரசிடம் தமிழகஅரசு எடுத்து கூறி தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.


Next Story