கொலை முயற்சி வழக்கில் 2½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி கைது
சேலம் மணியனூர் பொடாரங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முரளி (வயது 22). ரவுடியான இவர், கடந்த 2014–ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பிரபாவதி என்பவரை 5 பேருடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றார். மேலும், அதே ஆண்டில் காதல் விவகாரத்தில் ஆனந்தன் என்பவரைய
சேலம்,
சேலம் மணியனூர் பொடாரங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முரளி (வயது 22). ரவுடியான இவர், கடந்த 2014–ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பிரபாவதி என்பவரை 5 பேருடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றார். மேலும், அதே ஆண்டில் காதல் விவகாரத்தில் ஆனந்தன் என்பவரையும் முரளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார். ஆனால் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிரபாவதியும், ஆனந்தனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை தவிர மற்றவர்களை கைது செய்தனர். மேலும், அன்னதானப்பட்டி பகுதியில் ஒரு ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாகவும் முரளி மீது வழக்கு உள்ளது. 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி முரளி மீது நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் திருப்பூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்தநிலையில், கொலை முயற்சி வழக்கில் 2½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடி முரளி, சேலம் மணியனூர் பொடாரங்காடு பகுதியில் இருப்பதாக அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரவுடி முரளியை பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.