கடைசி நாளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூட்டமில்லாமல் வெறிச்சோடிய வங்கிகள்


கடைசி நாளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூட்டமில்லாமல் வெறிச்சோடிய வங்கிகள்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:15 AM IST (Updated: 31 Dec 2016 2:35 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி நாளில் வங்கிகளில் கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. டெபாசிட் செய்ய கடைசி நாள் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்

தேனி மாவட்டத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி நாளில் வங்கிகளில் கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

டெபாசிட் செய்ய கடைசி நாள்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வந்தனர். சில அத்தியாவசிய உபயோகங்களுக்கு மட்டும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, சுங்கவரி என்று சில பயன்பாட்டுக்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் நிறுத்தப்பட்டது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 50 நாட்கள் காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது.

வெறிச்சோடிய வங்கிகள்

தேனி மாவட்டத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த பிறகு, சுமார் ஒரு மாத காலம் வங்கிகளில் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணத்தை டெபாசிட் செய்தனர். பணம் எடுப்பதற்கும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு குறைவான மக்களே வந்தனர்.

நேற்று கடைசி நாள் என்ற போதிலும் தேனி நகரில் உள்ள பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. குறைந்த அளவிலேயே மக்கள் வந்து சென்றனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழில் சார்ந்தே பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். இந்த ஆண்டு போதிய மழை இன்றி வறட்சி நீடிப்பதால் ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வங்கிக் கணக்கில் செலுத்திவிட்ட நிலையில், மேற்கொண்டு தங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இல்லாததால் வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு வழியின்றி போனதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story