தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2016 3:45 AM IST (Updated: 31 Dec 2016 3:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், காங்கேயம் அருகே தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை உடனடியாக மூடக்கோரி கலெக்டர் அலுவ

திருப்பூர்,

காங்கேயம் அருகே தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை உடனடியாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினி பகுதியில் தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், மேலும் குழந்தைகள், நோயாளிகள் மூச்சுவிட திணறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த பகுதிகளில் உள்ள தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று பாப்பினி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது பாப்பினி பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகளை மூட வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் எஸ்.ஜெயந்தியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நச்சு கலந்த புகை

பாப்பினி கிராமப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு போன்றவையே எங்கள் பகுதி மக்களின் தொழிலாக இருந்து வருகிறது. இந்த தொழிலின் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

விவசாய பகுதியாக எங்கள் ஊரின் பல இடங்களில் தேங்காய் தொட்டிக்கரி சுடும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தேங்காய் தொட்டிகளை சுடும்போது இந்த ஆலைகளில் இருந்து அதிக அளவில் நச்சு கலந்த புகை வெளி வருகிறது. இந்த நச்சு புகையால் சுற்றுசூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் எங்கள் பகுதியில் உள்ள பலருக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் விவசாய நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் பறந்து விழுவதால் விவசாய பயிர்கள் பாதிப்பதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. இதனால் எங்கள் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகி வருகிறது.

இது மட்டுமின்றி இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த தண்ணீரை ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடியில் சேமித்து வைக்கிறார்கள். இதன் காரணமாக எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீரும் நிறம் மாறி காட்சியளிக்கிறது. இது நிலத்தடி நீரை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. இதை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து தேங்காய் தொட்டிக்கரி ஆலைகளை மூடுவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story