புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு


புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2016 3:48 AM IST (Updated: 31 Dec 2016 3:48 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். பசியால் வாடும் குழந்தைகளுக்கு... அதம்ய சேதன சேவா அமைப்பு விழா மற்றும் சங்கர மடத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி தே

பெங்களூரு

புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

பசியால் வாடும் குழந்தைகளுக்கு...

அதம்ய சேதன சேவா அமைப்பு விழா மற்றும் சங்கர மடத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம் திறப்பு விழா பெங்களூரு பசவனகுடியில் உள்ள நே‌ஷனல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையத்திற்கான அடிக்கல்லை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

20 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒரு தீர்மானம், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது ஆகும். பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் எதிர்கால தலைமுறையை ஆரோக்கியமானதாக உருவாக்க முடியும். அவர்களை கல்வியாளர்களாகவும் ஆக்க முடியும்.

புற்றுநோய் குணப்படுத்தும் மருந்துகள்

குழந்தைகளின் பசியை போக்கினால் அவர்கள் தங்களுக்கு ஆர்வமான துறையில் சாதிக்க முடியும். அதன் மூலம் நாடும் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடையும். நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன. எல்லா பிரச்சினைகளையும் அரசே தீர்க்கும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. தனி மனிதர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் முன் வந்து கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் அரசுக்கு உதவ வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும். அத்துடன் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

அதம்ய சேதன சேவா அமைப்பு குழந்தைகள், மாணவ–மாணவிகளின் பசியை போக்கும் பணியை செய்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்க சமத்துவ கொள்கை உடைய மனிதர்கள், அமைப்புகள் ஒற்றுமையாக ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். பெங்களூரு அறிவியல், சுகாதாரம், கல்வி நகரமாக பெயர் பெற்றுள்ளது. உயிர் கொல்லி நோயாக உள்ள புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான மருந்து கண்டுபிடிக்க நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் வெற்றி பெற வேண்டும். இந்த ஆராய்ச்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. ஆயினும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு

அதைத்தொடர்ந்து பேசிய கவர்னர் வஜூபாய் வாலா, “புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டறியும் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சுயநலம் இல்லாமல் மற்றவர்களின் நலனுக்காக பணியாற்றுவது மிகப்பெரிய மனிதநேயம் ஆகும். நாட்டில் வறுமையை போக்க பணக்காரர்கள், ஏழை மக்களின் குடும்பங்களை தத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் சுகாதாரத்துறையில் மாநில அரசு சில முக்கியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. நாட்டிலேயே பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை கர்நாடகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது“ என்றார்.

இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி அனந்தகுமார், மாநில சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ்குமார், அதம்ய சேதன சேவா அமைப்பின் தலைவர் தேஜஸ்வினி அனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story