திருச்சியில் ரூ.10 லட்சம் கேட்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காரில் கடத்தல்


திருச்சியில்  ரூ.10 லட்சம் கேட்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:00 AM IST (Updated: 31 Dec 2016 3:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.10 லட்சம் கேட்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காரில் கடத்தப்பட்டார். அவரை தனிப்படை போலீசார் தஞ்சைக்கு சென்று மீட்டு வந்தனர். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கடத்தல் திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்தவர் தாஜுதீன். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஆவார். நேற்று முன்தின

திருச்சியில் ரூ.10 லட்சம் கேட்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காரில் கடத்தப்பட்டார். அவரை தனிப்படை போலீசார் தஞ்சைக்கு சென்று மீட்டு வந்தனர்.

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கடத்தல்

திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்தவர் தாஜுதீன். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஆவார். நேற்று முன்தினம் காலை இவரை அரியமங்கலம் பகுதியில் மர்மநபர்கள் 2 பேர் திடீரென்று காரில் கடத்தி சென்றனர். அதன்பிறகு அவரை எங்கு கொண்டு சென்றனர் என்பது தெரியவில்லை. நீண்டநேரமாகியும் தாஜுதீன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு தாஜுதீன் மகன் பீர்சுல்தானிடம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசினார். அப்போது அந்த நபர், ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே தாஜுதீனை விடுவிப்போம் என்றும் மிரட்டினர். உடனே பீர்சுல்தான் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பீர்சுல்தானை அழைத்து தன்னிடம் ரூ.2 லட்சம் மட்டுமே இருப்பதாகவும், அந்த தொகையை கொடுத்துவிடுவதாகவும் கடத்தல்காரர்களிடம் கூறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

தனிப்படை போலீசார் மீட்டனர்

பீர்சுல்தானும் அவ்வாறே கடத்தல்காரர்களிடம் போனில் பேசினார். அப்போது அவர்கள், தாங்கள் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருப்பதாகவும், வரும்போது ரூ.2 லட்சத்துடன் சேர்த்து மேலும் ரூ.1 லட்சத்துக்கான நகைகளையும் கொண்டு வரும்படி கூறி உள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், போலீசார் உதவியுடன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சென்றார். அங்கு பதுங்கி இருந்த கடத்தல்காரர்களிடம் இருந்து தாஜுதீனை போலீசார் மீட்டனர்.

ஒருவர் கைது

ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் 2 பேரில் ஒருவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை அரியமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், தி.மு.க. பிரமுகர் என்பதும், ரியல்எஸ்டேட் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தாஜுதீனை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்தனர். திருச்சியில் ரூ.10 லட்சம் கேட்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கடத்தப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story