தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி எலியை வாயில் கடித்தபடி விவசாயிகள் போராட்டம்


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி எலியை வாயில் கடித்தபடி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:30 AM IST (Updated: 31 Dec 2016 3:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி எலியை வாயில் கடித்த படியும், தரையில் படுத்து உருண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்

திருச்சி

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி எலியை வாயில் கடித்த படியும், தரையில் படுத்து உருண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காலை 10 மணி அளவில் திரண்டு வந்தனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எலிக்கறியை சாப்பிடும் போராட்டமும், அங்கபிரதட்சணமும் செய்ய போவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றனர்.

எலியை வாயில் கடித்தபடி...

கலெக்டர் பழனிசாமி காரில் வந்து இறங்கியதும் அவரிடம் விவசாயிகள் கோரிக்கை குறித்து கூறினர். அப்போது விவசாயி ஒருவர் கலெக்டர் காலில் விழ முயன்றார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் வந்து பேசுமாறு கூறி விட்டு கலெக்டர் பழனிசாமி அலுவலகத்தின் உள்ளே சென்றார். இந்த நிலையில் கலெக்டர் கார் நிறுத்துமிடம் அருகே அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் சிலர் சட்டையை கழற்றி அரைநிர்வாணத்துடன் தரையில் படுத்து உருண்டனர்.

மேலும் சிலர் எலிக்கறியை துண்டு, துண்டாக வெட்டி மண்சட்டிகளில் எடுத்தும், இறந்த எலியையும் கொண்டு வந்திருந்தனர். வறட்சியால் விவசாயம் பாதித்ததால் எலிக்கறியை சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனக்கூறி விவசாயிகள் சிலர் எலிக்கறியையும், இறந்த எலியை வாயில் கடித்தபடியும் இருந்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் தொடங்க தாமதம்

பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கூட்ட அரங்கில் விவசாயிகள் பலர் அமர்ந்திருந்தனர். வழக்கமாக காலை 10.30 மணி அளவில் கூட்டம் தொடங்கும். நேற்று காலை 11.15 மணி ஆகியும் கூட்டம் தொடங்கவில்லை.

இதனால் கூட்ட அரங்கில் இருந்த த.மா.கா. விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவ.சூரியன் மற்றும் சிலர் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து கூட்டத்தை நடத்து, கூட்டத்தை நடத்து, காலம் தாழ்த்தாதே எனக்கூறி கோஷமிட்டனர். அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர்.

தர்ணா

கலெக்டர் பழனிசாமி கூட்ட அரங்கிற்கு வந்ததும் காலை 11.20 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. கலெக்டர் முன்பு தரையில் விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்படும் தேசிய நதி நீர் ஆணைய திட்டத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், கரும்புக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார். அதன்பின் தர்ணாவை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

இதற்கிடையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எலிக்கறியை வாயில் கடித்தப்படி போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கூட்டுறவு மற்றும் வங்கித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கோரிக்கைகளை தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

காய்ந்த மக்காச்சோளம்

வறட்சியால் மக்காச்சோள பயிர் காய்ந்ததால் நிவாரணம் வழங்க கோரி காய்ந்த பயிர்களை தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் கொண்டு வந்து கலெக்டரிடம் காண்பித்தனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story